செவ்வாய், 28 ஏப்ரல், 2009

சாம்பல் காமுகன்

அவள் உதடுகளில் சிகரெட்டை வைத்திருந்தாள்
தீக்குச்சிகள் கிடைக்காத பொழுதில்
என்னைக் கொளுத்தினேன்
புகை உமிழும் புகைபோக்கியானாள்
சுழலும் புகை வளையங்களில்
சாம்பல் நிற சுவர்கள் எழ
அமைதி பிறக்கும் காலம்
சூரியன் வழிப்பாதையில்
குளிர்ந்த நீரோடை
ஆடைகள் களைய
வெப்பம் ஏறிய நீர்த்துளிகள்
உடல் மணம் பரவும் வெளி
புகைச்சுவர் புதைந்து
வெளியேற போதாத காலம்
இன்னும் இன்னும்
புகைக்குள் சிகரெட்டாய் இருக்க
ஆண்டுகள் கழிவதை அறியவில்லை
கட்டுக்கட்டாய் ஊதிய சிகரெட்டுகள்
புகைச்சுவர் சுற்றி
அள்ள முடியா அளவிற்கு
கருத்துவிட்டன அவள் உதடுகள்
வெளிறிவிட்டது எனதுடல்.

கருத்துகள் இல்லை: