செவ்வாய், 28 ஏப்ரல், 2009

உள் மரம்

என் உயிர் பார்த்துக்கொண்டிருந்தது மரம் அசைவதை
இலைகள் அரும்பி காலத்தின் மரணத்தில் உதிர்ந்ததும்
தன்னுள்ளே இருந்த இலையுதிர்த்த மரத்தில் சேர்த்துக்கொண்டது
மரம் இப்போது வெளியிலில்லை
இலைகள் அடர்த்தியாய் ஒரு மரம்
என் உயிரில் கிளைகளை அசைத்தது
இலைகளோ உதிரவில்லை
மேலும் மேலுன் அடர்த்தியாய்
மிக நெருக்கமாய் ஓங்கி வளர
ஒற்றை மரக்கானகமாய் என் உயிர்
அங்கு பட்சிகள்கூடி கதைக்கின்றன
பழங்கள் தின்று சொல்லவொண்ணா
கொண்டாட்டத்தில் கத்தித் தீர்க்கின்றன
மரத்தில் ஒட்டியிருந்த ஆகாயம்
கருத்தபோது முதல் மழைத்துளிகளில்
கிளம்பிய மண்வாசனை
பின் இலைகளில் தேங்கி
வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு
உயிரின் குளிர்வு
நனைந்த வண்ணப்பறவைகள்
மழையின் அதிசயத்தை விழிகளை
உருட்டி உருட்டி வியந்தன
காதலில் முற்றிய இரு காட்டுப்பறவைகள்
ஒன்றின் மீது ஒன்றாய் இணைந்தன
இளஞ் சூடான மரம் ஈரம் காய்ந்தது
ஒளி சிந்திய என்னுயிர் மரம் பார்த்த
புற உலகின் பட்சிகள்
எனை நோக்கி வரத்தொடங்கின
நான் என்னைத் திறந்துகொண்டேன்.

மதுவிற்கு


சாம்பல் காமுகன்

அவள் உதடுகளில் சிகரெட்டை வைத்திருந்தாள்
தீக்குச்சிகள் கிடைக்காத பொழுதில்
என்னைக் கொளுத்தினேன்
புகை உமிழும் புகைபோக்கியானாள்
சுழலும் புகை வளையங்களில்
சாம்பல் நிற சுவர்கள் எழ
அமைதி பிறக்கும் காலம்
சூரியன் வழிப்பாதையில்
குளிர்ந்த நீரோடை
ஆடைகள் களைய
வெப்பம் ஏறிய நீர்த்துளிகள்
உடல் மணம் பரவும் வெளி
புகைச்சுவர் புதைந்து
வெளியேற போதாத காலம்
இன்னும் இன்னும்
புகைக்குள் சிகரெட்டாய் இருக்க
ஆண்டுகள் கழிவதை அறியவில்லை
கட்டுக்கட்டாய் ஊதிய சிகரெட்டுகள்
புகைச்சுவர் சுற்றி
அள்ள முடியா அளவிற்கு
கருத்துவிட்டன அவள் உதடுகள்
வெளிறிவிட்டது எனதுடல்.

சனி, 7 மார்ச், 2009

A FLOATING VEHICLE ON A SEA

In an azure garment
A blue sea splashed from her
In the floating vehicle
A fish I was
Wishing to get out into space
I broke the windows with my tail fin
In the profuse bleeding
my slippery body turned tired
while I quivered on the floor
she shrieks from the present
In the frothing of the blue garment
My faith glitters
Either drown
Or sob from the shore
Between these oscillated the mind
Elapsing Days
The floating vehicle, an optical illusion
Myself, as fish

the blue garment , as Sea

(Translation: Thara Ganesan)

வெள்ளி, 6 மார்ச், 2009

ஊர்தி மிதக்கும் கடல்

கரு நீலப் புடவையில்
அவளிலிருந்து அலையடிக்கும் நீலக்கடல்
மிதக்கும் ஊர்திக்குள்
மீனாகும் நான்
வெளி தேடி வாலால் கண்ணாடி உடைத்தேன்
கொட்டிய ரத்ததில்
வழுவழுப்பான உடல் சோர்ந்தேன்
கரையில் துடித்தவேளை
நிகழ்காலத்தில் அவள் கூச்சலிடுகிறாள்
நீலப் புடவையில் நுரை ததும்பதலில்
என் நம்பிக்கைகள் பளபளப்பக்கின்றன
ஒன்று கடலுக்குள் மூழ்குதல்
மற்றொன்று கரையில் விம்முதல்
இவற்றிற்கிடையே அல்லாடும் மனம்
கழியும் நாட்கள்
பொய்யாய் மிதந்த ஊர்தி
மீனாகிய நான்
கடலாகிய கரு நீலப்புடவை .